ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு-பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சேலம் மண்டல அளவிலான கள ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தார். பின்னர் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த அவரை, தலைமை செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின் செயலாளர் உதயசந்திரன், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் மற்றும் தொழில் துறையினருடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தாலுகா அலுவலகத்தில் ஆய்வு
ஆனால் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு காரை ஓட்ட டிரைவரிடம் கூறினார். சிறிது நேரத்தில் ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்தார். முதல்- அமைச்சர் திடீரென வந்ததால் தாலுகா அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது.
காரை விட்டு இறங்கிய முதல்- அமைச்சர், தாலுகா அலுலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளுடன் வந்து இருந்த மக்களை சந்தித்து பேசினார். என்ன தேவைக்காக வந்து இருக்கிறீர்கள?் என்று முதல்- அமைச்சர் கேட்டார். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை கூறினர். உங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் ஓமலூர் தாலுகா அலுவலகத்தின் உள்ளே சென்று அதிகாரிகளை அழைத்து பேசினார்.
2 பேருக்கு வீடு கட்ட நடவடிக்கை
பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் அமர்ந்து பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது, அவர் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து முதியோர் ஓய்வூதியம் எத்தனை நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள முதியோர் ஓய்வூதிய விண்ணப்பங்களின் விவரங்கள், இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்ட விவரங்கள், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தாசில்தார் வல்லமுனியப்பன் உள்ளிட்ட அலுவலர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
அப்போது, ஓமலூரை சேர்ந்த சின்னப் பொண்ணு, அலமேலு ஆகிய 2 பேர் தங்களுக்கு வீடு கட்டுவதற்கு உதவி புரிய வேண்டும் என்று கூறி மனு அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு உடனடியாக இலவச வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
மனுக்களுக்கு தீர்வு
மேலும் ஓமலூர் தாசில்தார் அலுவலக பணியாளர்களின் விவரங்களை கேட்டறிந்து, அலுவலக வருகை பதிவேட்டையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முதல்-அமைச்சரிடம் பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம் போன்றவை வழங்கிட வேண்டி கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர், ஓய்வூதியம் போன்றவை வழங்கிட வேண்டியும் கோரிக்கை மனு அளித்தனர். அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட முதல்-அமைச்சர், மனுக்களுக்கு உரிய முறையில் விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியதுடன், அங்கிருந்த அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் ஆய்வு
தொடர்ந்து சேலம் மாநகரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.92.13 கோடி மதிப்பீட்டில் சேலம் பழைய பஸ்நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, அவர் ஈரடுக்கு பஸ்நிலையத்தில் என்னென்ன? வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பார்வையிட்டார். தூண்கள் மற்றும் ஜன்னல்கள், மேற்கூரை உள்ளிட்டவை எவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்தார்.
ஈரடுக்கு பஸ் நிலையத்தில் மேலும் ெசய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்தும், அவை எப்போது முடியும் என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் விளக்கி கூறினார். அப்போது அவரிடம், ஈரடுக்கு பஸ் நிலைய பணிகள் முழுவதும் விரைவில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, தலைமை செயலாளர் இறையன்பு, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈரடுக்கு பஸ் நிலைய பணிகள் 95 சதவீதம் நிறைவு
சேலம் பழைய பஸ்நிலையம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பஸ்நிலையமாக கட்டப்பட்டு வருகிறது. ரூ.92 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது ஈரடுக்கு பஸ்நிலைய கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரடுக்கு பஸ் நிலையத்தில் தரை மற்றும் முதல்தளத்தில் பஸ்கள் நிறுத்துவதற்கான அனைத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வெளிப்புற பகுதிகளில் பெயிண்டு அடிக்கும் பணியும், மேல் மாடியில் ஓட்டல் வசதியும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளதால் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவிகளிடம் நலம் விசாரித்த முதல்- அமைச்சர்
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு முடித்து விட்டு சேலத்துக்கு காரில் புறப்பட்டார். அவர் காரில் வந்து கொண்டிருந்த போது சாலையோரம் திரண்டு நின்ற மாணவிகளை கண்டதும் காரை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மாணவிகள் அருகில் சென்று கைகொடுத்து நலம் விசாரித்தார். அப்போது நல்லா படிக்கிறீங்களா? என்று கேட்டதுடன், நன்றாக படிக்க வேண்டும் என்றும் கூறினார். அதன்பிறகு காரில் சேலம் புறப்பட்டு வந்தார்.