கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்இணை ஆணையர் தலைமையிலான குழு திடீர் ஆய்வு
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இணை ஆணையர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் முதுநகர்,
பதிவு சான்றிதழில் தவறான விவரம்
கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினார்கள். மேலும், அலுவலகத்தில் புதிய வாகனம் பதிவு, பழைய வாகனம் புதுப்பித்தல் மற்றும் ஆர்.சி. புத்தகம் வழங்குவது தெடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் இருந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. அதேபோன்று, இங்கு புதிய வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ்களில் தவறான விவரங்கள் உள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது.
திடீர் ஆய்வு
இதையடுத்து நேற்று திருச்சியில் இருந்து வட்டார போக்குவரத்து இணை ஆணையர் (அமலாக்க பிரிவு) வெங்கட்ரமணன் தலைமையிலான ஒரு குழுவினர் நேற்று கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கு புதிய வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ்களில் விவரங்களை ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஏதேனும் தவறுகள், குளறுபடிகள் நடந்துள்ளதா? என்று பார்வையிட்டு சென்றனர்.
இந்த ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் வழக்கு சம்பந்தமாக வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் குழுவினர் ஆய்வு காரணமாக நேற்று அலுவலக பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
காலி பணியிடங்கள்
மேலும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏற்படும் பணிகளின் பாதிப்புகளை தவிர்க்க, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 3 காலியிடங்கள் உள்ளிட்ட 9 அலுவலர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.