சிப்காட் தொழில் பூங்காவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சிப்காட் தொழில் பூங்காவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தொழில் பூங்காவில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் சர்க்கரை ஆலை அருகே 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில், ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 243 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட சிப்காட் தொழில் பூங்காவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து காலணி பூங்கா அமைக்க கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று எறையூர் சிப்காட் தொழில் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ஜெ.ரபீக் அகமது, கட்டுமான பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக பெரம்பலூரிலேயே மூலப்பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு, காலணிகள் தயாரிக்கப்படுகிறது. கொரியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், பெரும் நிறுவனங்களும் தொழில் தொடங்க வர உள்ளனர். 3 ஆண்டிற்குள் முழுமையாக பணிகள் முடிக்கப்படும், என்று கூறினார்.
மருத்துவமனை, மாணவர் விடுதி
முன்னதாக நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையின் தரம் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் மாணவர்களின் தங்கும் அறை, படிக்கும் அறை, உணவு சாப்பிடும் அறை, உணவின் தரம், குளியலறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விடுதி மாணவர்கள் தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர் கிரிக்கெட் மட்டை, பந்து, சதுரங்கம், கேரம்போர்டு ஆகிய விளையாட்டு உபகரணங்களை வரவழைத்து, அவற்றை மாணவர்களுக்கு வழங்கினார்.
அமைச்சர்கள்
ஆய்வின்போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் டாக்டர் தரேஸ் அகமது, மாவட்ட கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, எறையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி ராம்குமார், முன்னாள் கவுன்சிலர் ஜெயராமன், வசிஷ்டபுரம் ஊராட்சி மன்ற தலைவரும், ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளருமான கனிமொழி பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். எறையூரில் ஆய்வை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.