பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடங்குளத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தினர் ஆய்வு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேசிய ேபரிடர் மேலாண்மை ஆணையத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்
வள்ளியூர்:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேசிய ேபரிடர் மேலாண்மை ஆணையத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகளுக்கு கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், ஒத்திகைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வந்தனர்.
தேசிய பேரிடர் குழுவினர் ஆய்வு
அதாவது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய செயலாளர் கமல் கிஷோர், உறுப்பினர்கள் ராஜேந்திர சிங், எஸ்.கே.கோஸ், தேசிய பேரிடர் மீட்பு குழு டி.ஐ.ஜி. மோஷன் சகடி, துணை கமாண்டன்ட் பிரவீன் பிரசாத், இந்திய அணுசக்தி கழக நிர்வாக இயக்குனர் கே.கே.டி. ஆகியோர் கொண்ட குழுவினர் அணுமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் அணு உலை அமைந்த பகுதி மற்றும் முக்கிய இடங்களில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு, ஒத்திகை ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வு கூட்டம்
தொடர்ந்து கூடங்குளத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமார், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அவசர காலங்களில் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஒத்திகை குறித்தும் குழுவினருக்கு விளக்கம் அளித்தனர். இதில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.