விழுப்புரம்விதைப்பரிசோதனை நிலையத்தில் மண்டல அலுவலர் ஆய்வுவிவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க அறிவுரை
விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் மண்டல அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க அறிவுரை வழங்கினார்.
மண்டல அலுவலர் ஆய்வு
திருச்சி மண்டல விதைப்பரிசோதனை அலுவலர் அறிவழகன், விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதைப்பரிசோதனை நிலையத்திற்கு வரப்பெறும் விதை மாதிரிகளில் விதைகளின் முளைப்புத்திறன் சோதனை, ஈரப்பத சோதனை, புறத்தூய்மை சோதனை, பிற ரக கலப்பு விதைகளை கண்டறியும் சோதனை முறைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக சான்றுவிதை மாதிரிகளில் பிற ரக கலவன்கள் சரியான முறையில் பிரித்தெடுக்கப்படுகிறதா என்பதையும், சான்றுவிதை மாதிரி 2636 என்ற ஆய்வக எண் கொண்ட உளுந்து விதை மாதிரியின் முளைப்புத்திறனை ஆய்வு செய்தார்.
4,836 விதை மாதிரிகள்
மேலும் விதைப்பரிசோதனை நிலையத்தில் பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களின் செயல்பாடு குறித்த செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் இதுவரை சான்றுவிதை மாதிரிகள் 2,679 எண்களும், ஆய்வாளர் விதை மாதிரிகள் 1,425 எண்களும், பணிவிதை மாதிரிகள் 732 எண்களும் ஆக மொத்தம் 4,836 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட அளவிலான புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற ரக கலவன்கள் இன்றி உள்ள விதைகளை விவசாயிகளுக்கு வழங்கசெய்வதே விதைப்பரிசோதனை நிலையத்தின் முக்கிய நோக்கம் என்பதை வலியுறுத்தினார். அதோடு பெறப்படும் விதை மாதிரிகளை உரிய நேரத்தில் பரிசோதனை செய்து வழங்குமாறு விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிலையத்திற்கு வரும் விதை மாதிரிகளை சீரிய முறையில் பகுப்பாய்வு செய்து தரமான விதைகளே, விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மண்டல விதைப்பரிசோதனை அலுவலர் அறிவழகன் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் சந்தோஷ்குமார், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.