தஞ்சை மாவட்டத்தில் 718 பள்ளி வாகனங்கள் ஆய்வு


தஞ்சை மாவட்டத்தில் 718 பள்ளி வாகனங்கள் ஆய்வு
x

தஞ்சை மாவட்டத்தில் 718 பள்ளி வாகனங்கள் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 718 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளி வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா? மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய அனைத்து வசதிகளும் உள்ளதா என வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட இடங்களை சேர்ந்த பள்ளி வாகனங்கள் ஆய்வு தஞ்சையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

கண்காணிப்பு கேமரா

இதில் 270 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளி வாகனங்களில் ஏறிச்சென்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா? அவசரகால வழி கதவு உள்ளதா? அது முறையாக செயல்படுகிறதா? வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா; என்பது குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது சிறு சிறு குறைகள் கண்டறியப்பட்ட சில வாகனங்களை இயக்கக் கூடாது. அந்தக் குறைகள் அனைத்தும் முழுமையாக சரி செய்த பிறகு தான் இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். முன்னதாக பள்ளி வாகன டிரைவர்களுக்கு நடந்த கண் பரிசோதனை முகாமையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

718 வாகனங்கள்

பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறுகையில், " தஞ்சை மாவட்டத்தில் 718 பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது. தஞ்சை (270 வாகனங்கள்), கும்பகோணம் (210 வாகனங்கள்), பட்டுக்கோட்டை (238 வாகனங்கள்) ஆகிய மூன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த வாகனங்கள் அந்தந்த பகுதியில் ஆய்வு செய்யப்பட்டன. இதில் சிறுசிறு குறைகள் கண்டறியப்பட்ட வாகனங்கள் அந்தக் குறைகள் அனைத்தையும் முழுமையாக சரி செய்த பிறகே இயக்க அனுமதிக்கப்படும். மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு தான் முக்கியம். பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் கண்டிப்பாக 5 வருடம் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நேரத்திற்கு பஸ்கள் செல்ல அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார்வாகன ஆய்வாளர் ஆனந்த், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story