வயல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் 10 ஆயிரத்து 932 எக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாக தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் 10 ஆயிரத்து 932 எக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாக தெரிவித்தனர்.
முப்போக நெல் சாகுபடி
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதியில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு முன்னதாகவே அதாவது மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் சம்பா சாகுபடி பணியை தொடங்கினர்.
தொடர் மழை
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழை மற்றும் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
மழைக்கு தப்பிய சம்பா நெற்பயிர்களுக்கு விவசாயிகள் உரம் போட்டு பராமரித்து வந்தனர். பல்வேறு சிரமங்களுக்கு இடையே வளர்க்கப்பட்ட
நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளது. ஒருசில இடங்களில் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
அறுவடை பணிகள் பாதிப்பு
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்தது. வயலில் மழைநீர் தேங்கியதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள், பயறு வகை செடிகள், நிலக்கடலை செடிகள் சாய்ந்தன.
மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் லட்சுமிகாந்தம் தலைமையில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, குடவாசல், நீடாமங்கலம், நன்னிலம், கொரடாச்சேரி, வலங்கைமான் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வயல்களில் அதிகாரிகள் ஆய்வு
திருவாரூர் வட்டாரத்தில் பின்னவாசல், வேப்பூர், வஞ்சிபூர், கீழகூத்தங்குடி, வடகரை, புலிவலம், பள்ளிவாரமங்கலம், கள்ளிகுடி, கானூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண் உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், திருவாரூர் வட்டாரத்தில் 261 எக்டேர் நெற்பயிர்கள், உளுந்து 80 எக்டேர், பச்சைபயறு 3 ஆயிரத்து 414 எக்டேர் நீரில் மூழ்கியுள்ளன. மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்ததில் 10 ஆயிரத்து 932 எக்டேர் நெற்பயிர்களும், 7 ஆயிரத்து 610 எக்டேர் பயறு பயிர்களும், 882 எக்டேர் நிலக்கடலை செடிகளும் நீாில் மூழ்கி உள்ளன.
இன்றும் நடக்கிறது
திருவாரூர் மாவட்டத்தில் 75 சதவீத வயல்களை ஆய்வு செய்துள்ளோம். நாளையும் (அதாவதுஇன்று) மீதி இடங்களில் ஆய்வு பணி நடக்கிறது. ஆய்வு முடிந்தால் மட்டுமே முழுவிவரங்கள் தெரியவரும் என்றனர்.