வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி ஜவஹர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி ஜவஹர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மணாங்கோயில் ஊராட்சி புதுப்பேட்டையில் ரூ.43 லட்சத்தில் சந்தை கூடம் அமைக்கும் பணி, கள்ளியூர் கிராமத்தில் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம், ரூ.455 லட்சத்தில் கழிவறை கட்டுமான பணி, அக்ரகாரம் ஊராட்சியில் ரூ.11.78 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம், வெலக்கல்நத்தம் ஊராட்சி நந்திபெண்டா கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் துணை சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவஹர், கலெக்டர் அமர்குஷ்வாஹாவுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகளை தரமாக கட்டுமாறு அவர் அறிவுறுத்தினார்.
தரமானதாக...
முன்னதாக நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் அம்மணாங்கோயில் ஊராட்சி வரைபடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அக்ரகாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, சமூக அறிவியல் பாடத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை பராட்டினார்.
ஆய்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, உதவி செயற்பொறியாளர் பழனிசாமி, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், சித்ரகலா, வெலக்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.