வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
குடியாத்தம் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமிபிரியா ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலருமான ஜி.லட்சுமிபிரியா குடியாத்தம் நகராட்சி, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.
குடியாத்தம் நகராட்சி வைத்தீஸ்வரன் நகர் பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா, சுண்ணாம்பு பேட்டை பகுதியில் ரூ.1½ கோடியில் அமைக்கப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை, நகராட்சி ஆணையாளர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள இயற்கை உரம் தயாரிக்கும் மையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
கையுறை அணிய வேண்டும்
அப்போது தூய்மை பணியாளர்கள் கையுறை அணியாமல் பணியில் ஈடுப்பட்டதைபார்த்த அவர் நகராட்சி சார்பில் கையுறை வழங்கப்பட்டதா எனகேட்டார். அதற்கு அவர்கள் வழங்கினார்கள் நாங்கள் தான் அணியவில்லை என தெரிவித்தனர். அதற்கு இனி கையுறை அணிந்துதான் பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்த்தாங்கல் ஊராட்சி, புதூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 15 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வரும் தரிசு நில மேம்பாட்டு பணிகளையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்தில் அமைக்கப்பட்டு வரும் சமையலறை கூடம், அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்தில் சமையல் பொருட்களின் தரத்தை ஆய்வுசெய்து, சமைக்கப்பட்ட உணவை சுவைத்து பார்த்தார்.
பின்னர் மோடிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ அறை, பிரசவத்திற்குபின் தங்கும் அறை, பரிசோதனை கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் க.ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.ஆர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன், வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வேளாண் இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் நகர மன்றதலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில்தாமஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.