திண்டுக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திண்டுக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதிக்கும் பணி தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திண்டுக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதிக்கும் பணி தொடங்கியது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்களை பரிசோதனை செய்யும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதல் நிலை பரிசோதனை செய்யும்பணி நேற்று தொடங்கியது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறை உள்ளது. அங்கு 5ஆயிரத்து 633 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 3 ஆயிரத்து 33 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 3 ஆயிரத்து 346 வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் இருக்கின்றன.
கலெக்டர் ஆய்வு
இந்த எந்திரங்களின் முதல்நிலை பரிசோதனை நேற்று தொடங்கியது. இதற்காக அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் எந்திரங்கள் இருந்த அறை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை பரிசோதனை நடைபெற்றது. இதில் என்ஜினீயர்கள் உள்பட 40 பேரை கொண்ட குழுவினர் எந்திரங்களை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி வருகிற 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கிடையே எந்திரங்களின் முதல்நிலை பரிசோதனையை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.