அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு பகுதியில் தமிழக அரசு தொல்லியல் துறையின் சார்பில் 2 கட்டமாக அகழ்வாராய்ச்சி பணி நடந்து முடிந்தது. இந்த நிலையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ேநற்று இரவு 8 மணியளவில் மாளிகைமேட்டில் அகழாய்வு பணிகள் நடைபெற்ற பகுதியை ஆய்வு செய்ய வந்தார்.

அப்போது, மாளிகைமேடு அகழாய்வில் கண்டறியப்பட்ட பழமையான பொருட்கள் மற்றும் அகழாய்வு மேற்கொண்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ேமலும் மாளிகைமேட்டில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட அரண்மனையின் தொடர்ச்சியாக 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரையும் பார்வையிட்டார். அப்போது அகழாய்வின்போது எடுக்கப்பட்ட பொருட்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாங்கி பார்த்தார்.

காட்சிப்படுத்தப்பட்ட பழங்கால பொருட்கள்

அகழாய்வு பணியின்போது கண்டெடுக்கப்பட்ட பழங்கால தங்கக்காப்பு, மண்பானை, மண்ணாலான கெண்டி செம்பின் மூக்குப்பகுதி ஆகியவை முதல்-அமைச்சரின் பார்வைக்காக காட்சிபடுத்தப்பட்டு இருந்தன. மேலும் சோழர்களின் கலையை பின்பற்றிய யானை தந்தத்தாலான மனித உருவம், சீன மண் பாண்டங்கள், செப்பு நாணயங்கள், செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் ஆகியவையும் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.

இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவகங்கர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், எம்.பி.க்கள் ஆ.ராசா, திருமாவளவன், கலெக்டர் ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விருந்தினர் மாளிகை சென்றார்

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு வந்து இரவு உணவை முடித்துக்கொண்டு, அங்கு தங்கி ஓய்வெடுத்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.15 மணிக்கு அரியலூர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.


Next Story