ரேஷன் கடைகளின் பூட்டை உடைத்து பறக்கும் படையினர் ஆய்வு


தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் வெளிமாவட்டத்தினர் ஆய்வு செய்வதை கண்டித்து பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்

நாகையில் வெளிமாவட்டத்தினர் ஆய்வு செய்வதை கண்டித்து பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பறக்கும் படை

நாகை மாவட்ட ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை விவரங்களை ஆய்வு செய்ய மாநில பதிவாளர் உத்தரவிட்டார். அதன் பேரில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர்கள் தலைமையில் 3 பறக்கும் படையினர் நாகை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர்.

வெளி மாவட்ட பறக்கும் படையினரின் ஆய்வை கண்டித்து, நாகை மாவட்டத்தில் உள்ள 150 ரேஷன் கடை பணியாளர்கள் கடையை பூட்டிவிட்டு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நாகைக்கு ஆய்வுக்காக வந்த அதிகாரிகள், ரேஷன் கடைகள் பூட்டி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பூட்டை உடைத்து ஆய்வு

இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ரேஷன் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற பறக்கும் படையினர் அங்குள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, விற்பனை விவரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

நாகை வ.உ.சி. தெரு, காடம்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளின் பூட்டை உடைத்து பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். இதற்கிடையே வெளி மாவட்ட பறக்கும் படையினரின் ஆய்வை கண்டித்து நாகை தாலுகா அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

வெளி மாவட்ட பறக்கும் படையினரின் ஆய்வை கண்டித்து ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது, போலீஸ் பாதுகாப்புடன் கடையின் பூட்டை உடைத்து பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்தது உள்ளிட்ட அடுத்தடுத்த சம்பவங்களால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டது.

ரேஷன் கடைகள் மூடி கிடந்ததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story