நடமாடும் பரிசோதனை கூடம் மூலம் கடைகளில் உணவு பொருட்கள் ஆய்வு


நடமாடும் பரிசோதனை கூடம் மூலம் கடைகளில் உணவு பொருட்கள் ஆய்வு
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர் பகுதியில் நடமாடும் பரிசோதனை கூடம் மூலம் கடைகளில் உணவு பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் தரம்குறைவான பொருட்களை விற்றதை அவர்கள் கண்டுபிடித்தனர்

கடலூர்

கடலூர்

உணவு பொருட்களின் தரம்

கடலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை பரிசோதனை செய்து, அதன் தரத்தை தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடமாடும் உணவு பரிசோதனை கூட ஊர்தியை கடந்த 3-ந் தேதி கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள், மளிகை பொருட்கள் கடை, இனிப்பு மற்றும் பலகார வகைகள் செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் தரத்தை கடை உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.

24 கடைகளில் ஆய்வு

அந்த வகையில் கடலூர் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று நடமாடும் உணவு பரிசோதனை கூட ஊர்தி மூலம் முதுநகர் பகுதியில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், டீக்கடை, இனிப்பகம் உள்ளிட்ட 24 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்தனர். பின்னர் அதனை பரிசோதனை செய்ததில், பலகாரம், மிளகு தூள் உள்ளிட்ட 6 வகையான உணவு பொருட்கள் தரம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களிடம், தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றனர். அப்போது சென்னை உணவு பாதுகாப்பு பகுப்பாளர் சரவணன், வர்த்தக சங்க நிர்வாகி சதிஷ், கடலூர் துறைமுக பகுதி வர்த்தக சங்க நிர்வாகிகள் விக்னேஷ், வெங்கடேஷ், மாரியப்பன், பாண்டியன், மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள 10 கடைகளில் உணவு பொருட்களின் மாதிரியை சேகரித்து ஆய்வு செய்தனர்.

நெல்லிக்குப்பம்

இதேபோல் நெல்லிக்குப்பத்தில் பஸ் நிலையம் அருகில் உணவு பாதுகாப்பு பரிசோதனை வாகனம் மூலம் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில்

நடைபெற்றது. இதனை நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் 29 வகையான உணவுப் பொருட்களை தரம் குறித்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் நகராட்சி பொறியாளர் பாண்டு, வர்த்தக சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், நாசர் அலி, சுரேஷ், காசிம், ரகு உள்பட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் உணவு பொருள் கலப்படம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


Next Story