திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு
திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு செய்தார்.
காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு பேரூராட்சிகளின் இயக்குனர் கிரன்குராலா நேற்று வருகை தந்தார். அவர் அங்கு வளம் மீட்பு பூங்காவில் நடைபெற்று வரும் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரம், மண்புழு உரம், முட்டை ஓட்டில் இருந்து தயாரிக்கப்படும் காட்ரோஸ், பழங்களின் தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் காட்பவுடர் மற்றும் மீன்கள் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் மீன் அமிலம் மற்றும் ஜீவாமிர்தம் ஆகியவற்றை ஆய்வு செய்து அவற்றின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.
வளம் மீட்பு பூங்காவில் ரூ.44.72 லட்சத்தில் நடைபெறும் திட்ட பணியான பழைய குப்பைகளை பையோமைனிங் முறையில் தீர்வு செய்தல், ரூ.20 லட்சத்தில் நடைபெறும் வின்ரோ பிளாட்பார்ம் அமைத்தல் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் ரூ.334.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி வாரவ்சந்தை கட்டிட பணி மற்றும் ரூ.144.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் எரிவாயு தகன மேடை அமைக்கும் கட்டிட பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். மேலும், காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட கிரீன் சாம்பியன் விருதை பார்வையிட்டு பாராட்டினார்.
ஆய்வின் போது, காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ், துணை தலைவர் சுதா சிவசெல்வராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காளியப்பன், செயற்பொறியாளர் கருப்பையா, உதவி செயற் பொறியாளர்கள் திருமலைவாசன், கங்காதரன், காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது, இளநிலை பொறியாளர் ரமேஷ், காட்டுப்புத்தூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.