குடோனை சுற்றி சோலார் மின்வேலி பொருத்தம்


குடோனை சுற்றி சோலார் மின்வேலி பொருத்தம்
x
தினத்தந்தி 7 May 2023 4:45 AM IST (Updated: 7 May 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை தெப்பக்காடு முகாமுக்குள் புகுந்து உணவு பொருட்களை மக்னா யானை சேதப்படுத்தி வந்தது. இதை தடுக்க குடோனை சுற்றி சோலார் மின்வேலியை வனத்துறையினர் பொருத்தி உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

முதுமலை தெப்பக்காடு முகாமுக்குள் புகுந்து உணவு பொருட்களை மக்னா யானை சேதப்படுத்தி வந்தது. இதை தடுக்க குடோனை சுற்றி சோலார் மின்வேலியை வனத்துறையினர் பொருத்தி உள்ளனர்.

மக்னா யானை அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் காலை 9 மணி மற்றும் மாலை 6 மணிக்கு கேழ்வரகு உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகளை வளர்ப்பு யானைகளுக்கு வனத்துறையினர் வழங்கி வருகின்றனர். இதனால் முகாம் வளாகத்தில் உணவு பொருட்கள் வைக்கும் குடோன் உள்ளது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மக்னா யானை ஒன்று தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் இரவில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு வழங்கக்கூடிய உணவுப்பொருட்கள் வைக்கும் குடோனை உடைத்து சேதப்படுத்துகிறது. அங்குள்ள உணவுப் பொருட்களை தின்று விட்டு செல்கிறது.

மின் வேலி

மேலும் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலை சுற்றியுள்ள இரும்பு தடுப்புகளையும் உடைத்து நாசம் செய்தது. இதனால் வன ஊழியர்கள் இரவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் உணவுப் பொருட்கள் வைக்கும் குடோனை சுற்றிலும் வனத்துறையினர் சூரிய மின்சக்தியில் செயல்படும் மின்வேலியை பொருத்தி உள்ளனர்.

இதனால் காட்டு யானை குடோனை சேதப்படுத்துவதை தடுக்க முடியும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைக்கு பிடித்தமான உணவு இருப்பது தெரிந்து விட்டால் தொடர்ந்து இந்த பகுதிக்கு வந்து கொண்டே இருக்கும். முதுமலை வனப்பகுதி என்பதால் காட்டு யானையை விரட்ட முடியாது. இதனால் உணவுப் பொருட்கள் வைக்கும் குடோனை சுற்றிலும் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story