முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வை கண்டறியும் அதிநவீன கருவிகள் பொருத்தும் பணி
முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வை கண்டறியும் அதிநவீன கருவிகள் பொருத்தும் பணிகள் நடந்தன.
முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வை கண்டறியும் அதிநவீன கருவிகள் பொருத்தும் பணிகள் நடந்தன.
முல்லைப்பெரியாறு அணை
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது.
இந்த அணையில் நில அதிர்வுகளை கண்டறியும் வகையில் 'சிஸ்மோ கிராப்', 'ஆக்சிலரோ கிராப்-2' என்ற கருவிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த கருவிகள் பொருத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று இந்த பணிகள் நிறைவு பெற்றன.
நில அதிர்வுகள்
அணையின் மேல் பகுதியில் 'சிஸ்மோ கிராப்' கருவியும், அணையின் கேலரி என்று அழைக்கப்படும் சுரங்கப்பகுதியில் 'ஆக்சிலரோ கிராப்-2' கருவியும் பொருத்தப்பட்டது.
ஏற்கனவே அணையின் மேல் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 'ஆக்சிலரோ கிராப்-1' கருவி பொருத்தப்பட்டது. அந்த கருவி மூலம் நில அதிர்வு அலைகளின் அளவுகள் ஐதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதிகாரிகள்
இந்த பணிகள் ஐதராபாத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் நடந்தது. அவருடன் விஞ்ஞானி சேகர், தொழில்நுட்ப வல்லுனர் சீனிவாசன் ஆகியோர் கருவிகள் பொருத்தும் பணியை மேற்பார்வையிட்டனர்.
அப்போது காவிரி தொழில்நுட்ப குழும துணைத்தலைவர் செல்வராஜ், முல்லைப்பெரியாறு அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், முரளிதரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.