பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்களை அலுவலர்கள் விரைவாக வழங்க வேண்டும் அரசின் முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்களை விரைவாக வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு தமிழக அரசின் முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் அறிவுறுத்தினார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்களை விரைவாக வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு தமிழக அரசின் முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
வருவாய்த்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி முன்னிலை வகித்தார்.
தமிழக அரசின் முதன்மை செயலாளரும் தொழிலாளர் நல ஆணையரும், தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அதுல் ஆனந்த் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்- அமைச்சர் பல்வேறு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற பட்டா, சாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய்த்துறையின் சேவைகள் குறித்து கேட்டறிந்தும், இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். பொதுமக்கள் விண்ணப்பிக்கின்ற கோரிக்கைகளை விரைவாக விசாரணை நடத்தி அவற்றை நிறைவேற்றவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
நடவடிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 436 பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள்உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் பொதுமக்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான கோரிக்கைகள், சேவைகள் நீண்ட நாள் நிலுவையில் இருக்க கூடாது. அவற்றை அலுவலர்கள் உறுதி செய்து, உடனுக்குடன் உரிய தீர்வுகளை வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் பொதுமக்களுக்குத் தேவையான பட்டா, சிட்டா, சாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய்த்துறையின் சேவைகளை காலதாமதமின்றி உடனுக்குடன் வழங்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர் சித்ரா, உதவி கலெக்டர்கள் சித்ரா விஜயன், விஸ்வநாதன், துணை கலெக்டர் சாந்தி, நில அளவை உதவி இயக்குனர் ராஜா உள்பட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.