அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் அறிவுறுத்தல்
அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
சேலம்,
கண்காணிப்புக்குழு கூட்டம்
சேலம் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம், குழு துணைத்தலைவர்களான எம்.பி.க்கள் பொன்.கவுதமசிகாமணி, செந்தில்குமார், சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழு தலைவர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு திட்டங்கள் செயல்படுத்தும் போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, முறையாக நிதிகள் சென்று சேரவும், பணிகளை விரைவுபடுத்தவும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரக குடிநீர் திட்டம், பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திட்டப்பணிகள்
இந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அவ்வப்போது அரசு அலுவலர்களாலும், மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மூலம் கூறப்படும் திட்டங்களுக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ரேவதி ராஜசேகரன், உதவி கலெக்டர் கவிதா, திட்ட இயக்குனர் செல்வம், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.