கோடை நெற்பயிரில் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை நெற்பயிரில் காணப்படும் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் மற்றும் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ஆனந்தி விளக்கம் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை நெற்பயிரில் காணப்படும் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் மற்றும் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ஆனந்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலை சிலந்தி தாக்குதல்
காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது சாகுபடி செய்யபட்டுள்ள கோடை நெற்பயிரில், இலை சிலந்தியின் தாக்குதல் தென்படுகிறது. இலைச்சிலந்தியின் தாக்குதல் வரப்பு ஒரங்களிலிருந்து ஆரம்பித்து மற்ற இடங்களுக்கு பரவுகிறது. இச்சிலந்தியானது நெற்பயிர் இல்லாத சமயங்களில் எருமைப்புல் எனப்படும் களைச்செடியில் இனவிருத்தி செய்கிறது.
இந்த சிலந்தியின் சேதம் கோடை மற்றும் ஜூலை மாதங்களில் அதிகமாக காணப்படும். இலைச்சிலந்தியின் முட்டை பருவம் 1 முதல் 3 நாட்கள் ஆகும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் பலநிலைகளில் உயிர் வாழ்ந்து சேதத்தை ஏற்படுத்தி 7 முதல் 10 நாட்களில் முதிர்ந்த பூச்சிகளாக உருமாறும். தாக்கப்பட்ட இலைகளின் மேற்பரப்பில் 'தவிடு' தெளித்ததுப்போல் வெண்ணிற புள்ளிகள் காணப்படும். பூச்சியின் சேதம் அதிகரிக்கும் போது இலை காய்ந்து சருகாகி விடும்.
பச்சையத்தை இழந்து...
தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதன் தாக்குதல் 30-40 சதவீதம் வரை வெகுவாக தென்படுகிறது. குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் வட்டார பகுதிகளில் இச்சிலந்தியின் தாக்குதல் அதிகமாக தென்படுகிறது.
அளவில் மிகச்சிறிய இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த செம்பேன்கள் சாற்றை உறிஞ்சுவதால் பச்சையத்தை இழந்து அதிக எண்ணிக்கையில் மிகச்சிறிய வெள்ளை நிற புள்ளிகள் இலையின் மேற்புறத்தில் காணப்படும். அதிக அளவில் தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறி உரப்பற்றாக்குறை உள்ள வயல் போன்று தோற்றமளிக்கும்.
மேலாண்மை முறை
நாற்றங்கால் மற்றும் நடவு செய்த இளம்பயிர்களில் சுமார் 45 நாட்கள் வரை இதன் தாக்குதல் அதிகமாக காணப்படும். இதன் தாக்குதல் வரப்பு ஓரங்களில் தொடங்கி பின்பு காற்று வீசும் திசையில் வயலின் உள்ளே உள்ள பகுதிகளுக்கு சென்று தாக்கும்.
இதனை கட்டுபடுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ள அளவு தழைச்சத்தை பிரித்து இடவேண்டும். ஏக்கருக்கு பெனாசாகுயின் 10 இ.சி.-2 மி.லி., லிட்டர் அல்லது ஸ்பைரோமைசின் 240 எஸ்சி-0.5 மி.லி., லிட்டர் அல்லது புரோபர்கைட் 18.5 இசி-2 மி.லி., லிட்டர் இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தினை தெளித்து இந்த இலை சிலந்தி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.