திருவண்ணாமலையில் ரூ.6¾ கோடியில் 50 படுக்கைகளுடன் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை
திருவண்ணாமலையில் ரூ.6 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலையில் ரூ.6 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை
திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.6 கோடியே 75 லட்சம் மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது.
இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் முயற்சியினால் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
அதன்படி தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத் துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்து மருத்துவமனையினை பார்வையிட்டார்.
இயற்கை மருத்துவ சிறப்பு சிகிச்சை
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இந்த மருத்துவமனையில் ஆயுஷ் துறைகளான சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ புற நோயாளிகள் பிரிவும், 50 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவும் உள்ளது. இங்கு அனைத்து விதமான நோய்களுக்கும் உள்மருந்து, புற மருத்துவ சிகிச்சைகளான சித்த வர்ம சிகிச்சை, தொக்கணம் நீராவிக்குளியல், சுட்டிகை, ஒற்றடம் போன்ற சித்த மருத்துவத்தின் 32 வகையான புற மருத்துவ சிகிச்சைகளும் மற்றும் நீர் சிகிச்சை, வாழை இலை குளியல், மண் குளியல், அக்குபஞ்சர், இயன்முறை சிகிச்சை போன்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் நாள்பட்ட நோய்களுக்கு உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் அரவிந்தன், இணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் செல்வகுமார், மாவட்ட சித்தா மருத்துவர் (பொறுப்பு) கார்த்திகேயன், திருவண்ணாமலை ஒன்றிய குழுத்தலைவர் கலைவாணி கலைமணி, தி.மு.க. நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பிரியாவிஜயரங்கன், கார்த்திவேல்மாறன், ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் டாக்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்