தூத்துக்குடி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த கட்டளை- கட்டுப்பாட்டு மையம்; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
கட்டுப்பாட்டு மையம்
தூத்துக்குடி பொலிவுறு நகரம் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐதராபாத், ப்ரூடெக் சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியின் 2-வது தளத்தில் ரூ.13.77 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மையம் உள்ளிட்ட பல முடிவுற்ற திட்டப்பணிகளை ஒட்டுமொத்தமாக அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கனிமொழி எம்.பி. குத்துவிளக்கேற்றி இதன் செயல்பாட்டினை தொடங்கி வைத்து பின்னர் பார்வையிட்டார்.
இந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் சி.சி.டி.வி. கேமராக்கள், ஸ்மார்ட் தெருவிளக்குகள், பொது முகவரி அமைப்புகள், அவசர அழைப்பு பெட்டி, பொது வைஃபை ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் குடிநீர் வினியோகம், தூய்மை பணிகள், போக்குவரத்து சீரமைப்பு பணிகள், பூங்காக்கள் கண்காணிப்பு என பல்வேறு பணிகளை இம்மையத்தில் இருந்து கண்காணிக்கலாம்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் மண்டல தலைவர்கள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.