இயற்கை வழி விவசாயம் செய்தால் மட்டுமே ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைய முடியும்


இயற்கை வழி விவசாயம் செய்தால் மட்டுமே ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைய முடியும்
x

இந்திய விவசாயிகள் இயற்கை வழி விவசாயம் செய்தால் மட்டுமே ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைய முடியும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

திருவண்ணாமலை


இந்திய விவசாயிகள் இயற்கை வழி விவசாயம் செய்தால் மட்டுமே ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைய முடியும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

விவசாயிகளுடனான ஓர் சந்திப்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வள்ளலார் ஆசிரமத்தில் தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகளுடனான ஓர் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் தமிழக கவா்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூட்டரங்கில் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்டு இருந்த விளைபொருட்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில்...

நாம் இந்திய கண்டத்திற்கு மட்டும் உணவு உற்பத்தி செய்யவில்லை. அருகில் உள்ள துணை கண்டத்திற்கும் உணவு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறோம்.

வேதியியல் ரசாயன உரங்களை தவிர்த்து மண் சார்ந்த விவசாயத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சி, செழிப்பு ஆகிய அனைத்தும் இருக்க வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையில் செயல்படும் மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் பெரும்பங்காக வகிக்கும் பணியை செய்து வருகிறது.

நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை வழி விவசாயத்தில் உற்பத்தியை மேம்படுத்தலாம். விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டதால் நமக்கு அதிக பலம் கூடுகிறது. இந்த பலத்தை வைத்துக்கொண்டு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி நமக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய பங்கு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து வருகிறேன். ஐ.ஐ.டி.யில் படித்தவர்களும் விவசாயத்தை நோக்கி திரும்பி உள்ளனர். வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்தியாவில் அதிகமாக இருப்பவர்கள் விவசாயிகள்.

இதில் 60 முதல் 70 சதவீதம் விவசாயிகளுக்கு நிறைய குறைகள் உள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பின்தங்கி உள்ளது. இந்த நாடு வளர்ச்சிஅடைவதற்கு முக்கிய பங்கு விவசாயிகளுக்கு இருக்கிறது. விவசாயிகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.

வருகிற 2047-ல் நமக்கு ஒரு முழுமையான வளர்ச்சியடைந்த பாரதம் என்ற ஒரு மிகப்பெரிய குறிக்கோள் இருக்கிறது. அடுத்த வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு முக்கிய பங்கு விவசாயிகளாகிய உங்களை சார்ந்தது.

ஒருங்கிணைந்த வளர்ச்சி

மேலும் உலகத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை என்றால் பருவநிலை மாற்றம். இதற்கு காரணம் வேதியியல் ரசாயன உரங்களை பயன்படுத்துவது, காடுகளை அழிப்பது, மலைகளை சூறையாடுவது ஆகும். அடுத்த பிரச்சினை என்னவென்றால் உலகில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பசியால் வாடுகின்றனர்.

பசியில் உள்ள அந்த இரண்டு பங்கு மக்கள் இந்தியாவை நோக்கி பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியா உதவி செய்யுமா என்று காத்திருக்கின்றனர்.

இந்திய விவசாயிகள் இயற்கை வழி விவசாயம் செய்தால் மட்டுமே ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைய முடியும். மகளிரும் இதில் பங்கேற்கிறார்கள் என்பதை கண்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விவசாயிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியை முடித்த பின்னர் கவர்னர் அவரது குடும்பத்துடன் கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரமம் மற்றும் யோகி ராம்சுரத் ஆசிரமத்தில் தரிசனம் செய்தார்.


Next Story