டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து பழனி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து உள்ளாட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பழனி நகரின் அனைத்து பகுதிகளிலும் கொசு புகைமருந்து அடிக்கப்படுகிறது. இதேபோல் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு, வணிக நிறுவனங்களில் சோதனை செய்கின்றனர்.
இதுகுறித்து நகர்நல அலுவலர் மனோஜ்குமார் கூறும்போது, டெங்கு ஒழிப்பு பணிக்காக 66 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர் வீடுகள்தோறும் சென்று சோதனை செய்து, அங்கு தண்ணீர் தேங்கி இருந்தால் அவற்றை கொட்டி அப்புறப்படுத்துகின்றனர். தண்ணீர் தேங்கும் வகையில் பொருட்களை போடக்கூடாது என மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். இதேபோல் நகராட்சி பகுதியில் இளநீர் கடை வைத்துள்ளவர்கள், காலி இளநீர் கூடுகளை நகராட்சி குப்பைக்கிடங்கில் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடு, வணிக நிறுவனங்களிலும் டெங்கு கொசு உற்பத்தி சூழல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றார்.