திண்டுக்கல்லில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்; வீடு, வீடாக 'அபேட்' மருந்து தெளிப்பு


திண்டுக்கல்லில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்; வீடு, வீடாக அபேட் மருந்து தெளிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2023 2:30 AM IST (Updated: 21 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீடு, வீடாக சென்று ‘அபேட்’ மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீடு, வீடாக சென்று 'அபேட்' மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காய்ச்சல் பாதிப்பு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் வீடுகள் முன்பு தேங்கும் மழைநீர் மற்றும் தெருவில் கிடக்கும் ரப்பர் டயர்கள், தேங்காய் மட்டைகள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீரில் டெங்கு கொசுப்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும். மேலும் வீடுகளில் திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் இருக்கும் தண்ணீரிலும் கொசுப்புழுக்கள் உருவாகும். இவ்வாறு உருவாகும் கொசுக்களால் மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புக்கு பொதுமக்கள் ஆளாகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற கடந்த சில நாட்களாக பலர் வருகின்றனர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

'அபேட்' மருந்து தெளிப்பு

அதன்படி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில், மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டியன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகையா, சுரேஷ்குமார் மற்றும் குழுவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். மேலும் வீடுகளில் திறந்த நிலையில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்களை அழிக்கும் 'அபேட்' மருந்தை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு நன்னீரில் உற்பத்தியாகும் டெங்கு கொசுப்புழுக்களை ஒழிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். தண்ணீர் தொட்டிகளை எப்போதும் மூடி வைக்க வேண்டும். தெருக்களில் கிடக்கும் தேங்காய் மட்டைகள், ரப்பர் டயர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த முன்வர வேண்டும் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.


Next Story