கல்லணைக்கால்வாயில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்
கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து தஞ்சை கல்லணைக்கால்வாயில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து தஞ்சை கல்லணைக்கால்வாயில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கல்லணைக்கால்வாய்
தஞ்சை மாநகரின் மையப்பகுதி வழியாக செல்லும் கல்லணைக்கால்வாய் புதுஆறு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கல்லணைக்கால்வாய் மூலம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2½ லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் தஞ்சை காந்திஜி சாலையில் இருந்து எம்.கே.மூப்பனார் சாலை பாலம் வரை உள்ள கல்லணைக்கால்வாயில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்திருந்தன
ஆகாயத்தாமரை
இதனால் கல்லணைக்கால்வாயில் நீர் இருப்பதே தெரியாதபடி ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்தது. இவற்றால் காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் போது நீரின் வேகம் தடைபடும் நிலை ஏற்பட்டது.
இதன்காரணமாக கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் சூழல் நிலவியது. எனவே, கல்லணைக்கால்வாய்க்குள் வளர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அகற்றும் பணி
இந்த நிலையில் நேற்று கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கல்லணைக்கால்வாயில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகாயத்தாமரைகளை அகற்றி டிராக்டர் மூலம் அள்ளிச்செல்கின்றனர். மேலும், கடைமடைக்கு தண்ணீர் செல்வதற்கு பாதிப்பின்றி ஆகாயத்தாமரைகள் விரைவாக அகற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.