கூடலூர்- மசினகுடி இடையே மாயாறு தரைப்பாலத்தில் அடைப்புகளை சரி செய்யும் பணி தீவிரம்
கூடலூர்- மசினகுடி இடையே மாயாறு தரைப்பாலத்தில் ஏற்படும் அடைப்புகளை பொக்லைன் எந்திரம் உதவியுடன் உடனுக்குடன் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கூடலூர்
கூடலூர்- மசினகுடி இடையே மாயாறு தரைப்பாலத்தில் ஏற்படும் அடைப்புகளை பொக்லைன் எந்திரம் உதவியுடன் உடனுக்குடன் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
பாலத்தை மூழ்கடிக்கும் வெள்ளம்
கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இதில் தெப்பக்காட்டில் மாயாறு ஓடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்றின் குறுக்கே இருந்த பழமையான இரும்பு பாலம் அகற்றப்பட்டது. இதனால் தற்காலிகமாக வனத்துறைக்கு சொந்தமான தரைப் பாலம் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர் கனமழை பெய்தது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மாயாற்றில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதேபோல் கடந்த வாரமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆற்று தண்ணீரில் கழிவுகள் அடித்து வரப்பட்டு தரைப்பாலத்தில் அடைப்புகள் உண்டானது தெரியவந்தது.
அடைப்புகள் சரிசெய்யும் பணி
இதன் காரணமாக பொக்லைன் எந்திரத்தை சம்பந்தப்பட்ட துறையினர் வரவழைத்து தரைப்பாலத்தில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடன் அகற்றி வருகின்றனர். இதனால் ஆற்று நீர் சீராக செல்ல வழி ஏற்பட்டுள்ளது. இதனால் பரவலாக பெய்யும் மழையால் தரைப்பாலம் மூழ்க வாய்ப்பு இல்லை. சில சமயங்களில் அடைப்புகள் ஏற்பட்டு பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது.
இதனால் எந்திரம் உதவியுடன் அடைப்புகள் சரி செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே புதிய சிமெண்ட் பாலத்தை கட்டும் பணியை அதிகாரிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என மசனகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.