கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்


கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்
x

கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர்

அண்ணாமலைநகர்,

தண்ணீர் திறப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால், மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 1.20 லட்சம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த உபரிநீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தற்போது கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடங்களுக்கு...

மேலும் கீழணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க கூடும் என்பதால், கொள்ளிடம் கரையோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், கொள்ளிடம் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வலுவிழந்து காணப்படும் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதிகளில் கற்களை கொட்டி பலப்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே கீழணையில் இருந்து கடந்த 3-ந் தேதி கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பலப்படுத்தும் பணி

இதனால் சிதம்பரம் அருகே உள்ள பல்வேறு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக சிதம்பரத்தின் மேற்கு பகுதியில் உள்ள கொள்ளிடக்கரை பல இடங்களில் வலுவிழந்தது. இந்நிலையில் தற்போதும் கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதால், சிதம்பரம் அருகே உள்ள கீழத்திருக்கழிப்பாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிதம்பரம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் கருங்கற்களைக் கொட்டி கொள்ளிடக்கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.


Next Story