நெல் வயல்களில் ஆட்டுக்கிடை அமைப்பதில் தீவிரம்


நெல் வயல்களில் ஆட்டுக்கிடை அமைப்பதில் தீவிரம்
x

தா.பழூர் பகுதியில் பாரம்பரிய முறையில் ஆட்டுக்கிடை அமைப்பதில் விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரியலூர்

தா.பழூர்

ஆட்டுக்கிடை அமைப்பு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. தற்போது நெல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் நெல் பயிருக்கு மாற்றாக பல்வேறு இடங்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடி செய்யப்படாத வயல்வெளிகளில் பாரம்பரிய முறைப்படி ஆட்டுக்கிடைகளை அமைத்து வரும் ஆடி பட்டத்தை எதிர்கொள்ளும் வகையில் விவசாயிகள் வயலுக்கு எரு சேர்க்கின்றனர். ஆட்டுக்கிடை மற்றும் மாட்டு கிடைகள் அமைத்து உரம் சேர்க்கும் விவசாய நிலங்களில் விளைச்சல் அதிகரிப்பதால் செயற்கை உரங்களை தவிர்த்து, வயல்வெளிகளில் ஆட்டுக்கிடைகளை அமைத்து இயற்கை உரமேற்றி விவசாயம் செய்வது அதிகரித்து வருகிறது. நெல் விவசாயத்தில் உற்பத்தி செலவு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.

ரூ.2 ஆயிரம் செலவாகிறது

உற்பத்தி செலவினங்களை குறைக்கும் வகையில், விவசாயிகள் இயற்கை தொழில் நுட்பங்களை கடைபிடிக்க முன்வந்துள்ளனர். தற்போது செயற்கை உர பயன்பாட்டை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதற்காக வயல்வெளிகளில் ஆட்டுக்கிடைகளை அமைத்து உரமேற்றுவதை விவசாயிகள் தீவிரமாக பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு ஒரு ஆட்டிற்கு ரூ.2 வாடகையாக வசூலிக்கின்றனர். ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஆயிரம் ஆடுகள் என்ற கணக்கில் வயல்களில் ஆடுகளை நிறுத்துகின்றனர். அதன்படி ஒருநாளைக்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.2 ஆயிரம் செலவாகிறது. அப்படி ஒரு நாள் மட்டும் நிறுத்தினாலே போதுமானது. இந்த செலவானது மற்ற உரத்தினைவிட குறைவானதேயாகும். ஆட்டுக்கிடை அமைப்போருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.


Next Story