மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் தீவிரம்


மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் தீவிரம்
x

நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மண் சரிவு அபாயம்

மலை மாவட்டமான நீலகிரியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. கோடை சீசனையொட்டி இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளிலும், வளைவுகள் அதிகமாகவும் அமைக்கப்பட்டு உள்ளன.

இதனால் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் சாலைகளில் மரம் விழுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மண்சரிவு அபாயம் இருப்பதாக 280-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. எனவே அதை கருத்தில் கொண்டு சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது.

தடுப்புச்சுவர் கட்டும் பணி

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சாலை குறுகலாக இருக்கும் இடங்கள் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் தடுப்பு சுவர் கட்டுதல், சாலைகளை அகலப்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டன. இதன்படி ஊட்டி -மஞ்சூர் சாலையில் எடக்காடு, மஞ்சூர் - குன்னூர் சாலையில் தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது. இதில் குறிப்பாக அவலாஞ்சி சாலையில் 5 இடங்களில் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் ஒரு சில மாதங்களில் முடிவடையும்.

இதேபோல் பணிகள் நடக்கும்போது வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் விதமாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story