ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரம்
வடமதுரை அருகே, ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வடமதுரையில் இருந்து வேல்வார்கோட்டை செல்லும் சாலையின் குறுக்கே திண்டுக்கல்-திருச்சி இருவழி ரெயில் பாதை செல்கிறது. இந்த ரெயில் பாதை வழியாக தினமும் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் ரெயில் வரும் சமயங்களில் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதன் காரணமாக வேல்வார்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், ரெயில் கடந்து செல்லும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக காலை நேரத்தில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் சிரமப்பட்டு வந்தனர். எனவே ரெயில் தண்டவாளத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர். இதனைக்கருத்தில் கொண்டு ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் தீவிரமாக நடந்து வருகிறது.