நெற்பயிர்களுக்கு உரமிடும் பணி தீவிரம்
கம்பம் பகுதியில் நெற்பயிர்களுக்கு உரமிடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உரமிடும் பணி
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்காக கடந்த ஜூன் 1-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கம்பம், சுருளிப்பட்டி, சாமாண்டிபுரம், நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் நாற்றாங்கால் அமைக்கப்பட்டது. அதன்பின்னர் நாற்று நடும் பணிகள் நடைபெற்றன.
நடவு செய்து தற்போது 20 நாட்களாகி உள்ளது. இந்த நிலையில் கம்பம் பகுதியில் நெற்பயிர்களில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், பயிர்கள் செழிப்பாக வளரவும் விவசாயிகள் களைகொல்லி மற்றும் உரம் இடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கம்பு சாகுபடி
இதேபோல் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதிகளான ஏகலூத்து, கல்உடைச்சான் பாறை குறுக்கு வழிபாடு, பெருமாள் கோவில் புலம், கழுதை மேடு, சரித்திரவு உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த பங்குனி மாதம் முதல் வாரத்தில் எள், தட்டை பயறு, அவரை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் எள் அறுவடை பணி நடந்தது.
அதன் பின்பு நிலங்களை நன்கு உழுது தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரல் மழை பெய்ததால், கூடலூர் பகுதியில் கம்பு, சோள சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிர்கள் கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யப்படும். இதனை வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வார்கள். இதனால் கூடலூர் பகுதியில் விவசாயிகள் கம்பு, சோள பயிர்களை சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.