அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல் கட்டும் பணி தீவிரம்
பொறையாறு பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொறையாறு:
பொறையாறு பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெல் சாகுபடி
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் ஆறுகளில் வரும் தண்ணீரின் அளவை பொறுத்து சாகுபடி பரப்பளவு மாறுபடும். ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் மாதம் 12-ந் தேதி திறந்து விடுவார்கள்.
கடந்த ஆண்டு (2022) மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கினர். குறுவையை தொடர்ந்து சம்பா, தாளடி பயிரிடப்பட்டது.
மழையால் பாதிப்பு
குறுவை அறுவடை நேரத்திலும், சம்பா அறுவடை ேநரத்திலும் டெல்டா மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு, செம்பனார்கோவில், பரசலூர், கீழையூர், வடகரை, இலுப்பூர், சங்கரன்பந்தல், காழியப்பநல்லூர், விசலூர், ஆயப்பாடி, திருக்களாச்சேரி, காட்டுச்சேரி, தில்லையாடி, திருவிடைக்கழி, மேமாத்தூர், கீழ்மாத்தூர், நரசிங்கநத்தம், நல்லாடை, கொத்தங்குடி, ஈச்சங்குடி, விளாகம், அரசூர், கிடாரங்கொண்டான், கீழையூர் மற்றும் சுற்றுவட்டார ஊராட்சி பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் சம்பா அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
வைக்கோல் விற்பனை
மழை பாதிப்புகளை சமாளித்து விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொண்டனர். இதில் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் தற்போது அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோலை சேகரித்து எந்திரம் மூலம் கட்டி, விற்பனைக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் அறுவடை பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
வைக்கோல் கட்டும் பணி
இந்த பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் எந்திரங்கள் மூலம் வைக்கோல் கட்டும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வைக்கோல் கட்டுகளை வியாபாரிகள் கால்நடைகளுக்காகவும், காகித தொழிற்சாலைக்கும் வாங்கி செல்கின்றனர்.