எந்திரம் மூலம் வைக்கோல் கட்டும் பணி தீவிரம்
கொள்ளிடம் பகுதியில் எந்திரம் மூலம் வைக்கோல் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு கட்டு ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் எந்திரம் மூலம் வைக்கோல் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு கட்டு ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அறுவடை பணிகள்
கொள்ளிடம் வட்டார பகுதியில் சமீபத்தில் பெய்த மழைநீர் விளைநிலங்களில் வடிந்த நிலையில் சம்பா நெற்பயிர்கள் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருவ மழை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் இவை அனைத்தும் சம்பா நெற்பயிர்கள் சாகுபடியை பாதித்தது. தொடர்ந்து தண்ணீரில் வடிந்தவுடன் சேதம் அடைந்த பயிரை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
உரங்கள் இட்டும், பூச்சி மருந்துகள் தெளித்தும் நெற்பயிரை வளர்த்து வந்தனர். ஆனாலும் விவசாயிகள் விரும்பிய அளவுக்கு நெற்பயிர் வளர்ச்சி இல்லாமல் இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டது. நெல் அறுவடைக்கு பிறகு வைகோலின் அளவும் குறைந்தே காணப்பட்டது. நெற்பயிர் எந்த பாதிப்பும் இல்லாமல் முழுமையாக வளர்ந்து அறுவடை செய்தால் வைக்கோலும் முழுமையாக கிடைக்கும்.
ரூ.250 வரை விற்பனை
இதனால் வைக்கோல் தட்டுப்பாடு ஏற்படாது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாகுபடி குறைந்து வைக்கோல் உற்பத்தியும் குறைந்தது. இதனால் விலையும் அதிகரித்தது. நெல் அறுவடை எப்படி முழுக்க முழுக்க எந்திரம் மூலம் நடைபெறுகிறதோ, அதேபோல அறுவடைக்கு பிறகு வயலில் குவிந்து கிடக்கின்ற வைக்கோலை சேகரித்து கட்டுகளாக கட்டுவதற்கும் எந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இப்படி எந்திரங்கள் மூலம் வைக்கோல் கட்டுகளாக கட்டப்பட்டு டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் தற்போது கிராம பகுதிகளுக்கு சென்று விற்கப்பட்டு வருகின்றன. ஒரு ஏக்கருக்கு 70 முதல் 80 வைக்கோல் கட்டுகள் எந்திரம் மூலம் தயார் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு ஒரு கட்டு வைக்கோல் ரூ.100 மற்றும் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உரிய விலை நிர்ணயம் செய்து விற்பனை
அறுவடை செய்த வயலில் எந்திரம் மூலம் வைக்கோல் ஒரு கட்டு கட்டுவதற்கு ரூ. 35 வசூல் செய்கின்றனர். எந்திரங்களை பயன்படுத்தி வைகோல்களை சேகரித்து கட்டுவதற்கு நேரம் மிக குறைவு. ஆட்கள் தேவையில்லை. நேரம் மிச்சம் ஆகிறது. வயலில் வைக்கோல் சிதறி கிடப்பதும் இல்லை. எந்திரம் மூலம் மிகவும் சுத்தமாக வைக்கோல் சேதமின்றி கட்டுகளாக கட்டப்படுகின்றன. ஆனால் விலை தான் அதிகமாக உயர்ந்துள்ளது.
வைக்கோல் கட்டுகள் தற்போது அதிகமான விலைக்கு விற்பனை செய்து வருவதால் விவசாயிகள், தொழிலாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே வைக்கோலை உரிய விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.