கீழ்வேளூர் ஒன்றியத்தில் குறுவை சாகுபடி பணி தீவிரம்
கீழ்வேளூர் ஒன்றியத்தில் குறுவை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உரம், விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியத்தில் குறுவை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உரம், விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணை திறப்பு
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு முன் கூட்டியே மே 24-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை ஆர்வமுடன் தொடங்கினர்.
டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களுக்கு காவிரி நீர் வந்து அடைந்தது. இதை தொடர்ந்து விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குறுவை சாகுபடி
அதன்படி கீழ்வேளூர் ஒன்றியம் பட்டமங்கலம், தேவூர், ராதா மங்கலம், வெண்மணி, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, காக்கழனி, உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3 ஆயிரம் ஏக்கரில் டிராக்டர் மூலம் உழவு பணி, நேரடி நெல் விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நெல் நாற்றங்கால் அமைத்து பராமரிக்கும் பணி, வயலை உழுதல், உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரம்-விதைகள்
தேவையான விதைகள், உரம் மற்றும் இடுபொருட்கள், வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தங்குதடையின்றி கடைமடை பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.