கடலூரில் தொடர் விபத்துக்கள் எதிரொலி:புதிதாக கட்டப்பட்ட சிறுபாலங்கள் சீரமைக்கும் பணி தீவிரம்


கடலூரில் தொடர் விபத்துக்கள் எதிரொலி:புதிதாக கட்டப்பட்ட சிறுபாலங்கள் சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் தொடரும் விபத்துகளின் காரணமாக, புதிதாக கட்டப்பட்ட சிறுபாலங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர்


கடலூர் மாநகரில் மழைநீர் தேங்காத வகையில் சுமார் 45 கி.மீ. தூரத்துக்கு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணி 5 ஆண்டுகளை கடந்தும் இன்னும் நிறைவடையவில்லை. இதில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலை, ஜட்ஜ் பங்களா ரோடு உள்ளிட்ட பகுதியில் சாலையின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட வடிகால் வாய்க்காலில் சிறுபாலங்கள் அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த சிறுபாலங்கள் அனைத்தும் தரமின்றியும், மிக உயரமாகவும் அமைக்கப்பட்டதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி விபத்தில் சிக்கி வந்தனர். அந்த சிறுபாலங்களால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்ததால், அதனை முறையாக கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

அதன் பேரில் முதற்கட்டமாக ஜட்ஜ் பங்களா ரோட்டில் உள்ள சிறுபாலமும், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிறுபாலமும் சீரமைக்கப்பட்டது.

மாற்று பாதையில் வாகனங்கள்

இந்த நிலையில் நேற்று பழைய கலெக்டர் அலுவலக சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலம் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக பாலத்தின் இருபுறமும் பொக்லைன் எந்திரங்களால் தோண்டப்பட்டது. பின்னர் அவ்வழியாக வாகனங்கள் எளிதில் சென்றுவர வசதியாக பாலத்தில் இருந்து இருமார்க்கமாகவும் சுமார் 15 அடி தூரத்திற்கு சரிவு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியால் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.


Next Story