நெல் கொள்முதல் பணி தீவிரம்


நெல் கொள்முதல் பணி தீவிரம்
x

அம்மாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நெல் மூட்டைகள் தேக்கம்

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. இந்த பகுதியில் தற்போது அறுவடை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஏராளமான விவசாயிகள் கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி வைத்து விற்பனை செய்வதற்காக காத்திருந்தனர். கொள்முதல் நிலையங்கள் முன்பு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகளும் தேக்கம் அடைந்து காணப்பட்டது.

விவசாயிகள் வலியுறுத்தல்

இந்த நிலையில் பாதுகாப்பான இடங்களுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதற்கு உண்டான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்து வந்தனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நிலையத்தில் இருந்து உடனடியாக தஞ்சை மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக குடோன்களுக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

பாதுகாக்க நடவடிக்கை

ஏற்கனவே பருவம் தவறி பெய்த மழையால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர், கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் குடோனுக்கு அனுப்பி, கொள்முதல் பணிகளை விரைவுடுபத்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை தேக்கி வைக்காமல் ெகாள்முதல் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது கொள்முதல் பணி தீவிரம் அடைந்துள்ளது.

உடனுக்குடன்...

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் கூறுகையில், 'அம்மாப்பேட்டை, பல்லவராயன்பேட்டை, புத்தூர், தீபாம்பாள்புரம், பள்ளியூர், அருந்தவபுரம், உக்கடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் தேக்கமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனுக்குடன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து அரசு குடோனுக்கு வாகனங்கள் மூலம் ஏற்றி அனுப்பப்படுகிறது.

அம்மாப்பேட்டை பகுதியில் விவசாயிகளுடைய நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருவதை வரவேற்கிறோம். இந்த பணி தொய்வின்றி நடைபெற நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றனர்.


Related Tags :
Next Story