குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணி தீவிரம்


குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி

குளச்சல்:

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீன்பிடி தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

அந்த வகையில் குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர்.

பழுதுபார்ப்பு பணி

இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் கடந்த மே மாதம் 31-ந் தேதி நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்கியது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளை பழுது பார்த்து வருகின்றனர். மீனவர்கள் வலைகளை பின்னும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் நீங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் விசைப்படகினர் தங்கள் விசைப்படகுகளை தீவிரமாக பழுது பார்த்து வருகின்றனர்.


Next Story