திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரம்


திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 4 Jun 2023 2:30 AM IST (Updated: 4 Jun 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 3½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக, பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் இறுதிகட்ட பணி தீவிரமாக நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 3½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக, பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் இறுதிகட்ட பணி தீவிரமாக நடந்தது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடைவிடுமுறை முடிந்து வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதையொட்டி பள்ளிகளை சுத்தம் செய்து, கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிகள் திறக்கும் நாளில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்களை வழங்கும்படி அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

இதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே மாவட்ட வாரியாக மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த பாடப்புத்தகங்கள் தேவைக்கேற்ப பள்ளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

3½ லட்சம் பாடப்புத்தகங்கள்

இதில், திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,983 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 3 லட்சத்து 45 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்தனர். எனவே இந்த கல்வி ஆண்டுக்கு 3½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஏற்கனவே வந்துவிட்டன.

இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகளை அனுப்பும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று இறுதிகட்டமாக பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்தது. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலக கிடங்குகளில் இருந்து வாகனங்களில் பாடப்புத்தகங்களை ஏற்றி பள்ளிகளுக்கு அனுப்பினர்.

இதில் திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கிடங்கில் இருந்தும் பாடப்புத்தகங்கள் மினிலாரியில் ஏற்றப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. மேலும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் சென்றடைந்ததை கல்வி அதிகாரிகள் ஆய்வு மூலம் உறுதி செய்தனர்.


Next Story