மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்


மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
x

மாடுகளுக்கு வேகமாக நோய் பரவுவதை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

மாடுகளுக்கு வேகமாக நோய் பரவுவதை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாடுகளுக்கு நோய் பரவல்

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பாலமதி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வளர்க்கும் மாடுகளுக்கு புதிய வகை அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் அசாம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள மாடுகளுக்கு ஏற்படும் தோல் கழலை நோய் ஆகும். மாடுகளை சந்தைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வேலூர் மாவட்டத்திலும் இந்தநோய் பரவி வருகிறது.

இந்த நோய் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாடுகளுக்கு உள்ளதை உறுதி செய்ததை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

முதல் கட்டமாக பாலமதி பகுதியில் நேற்று முன்தினம் தடுப்பூசி போடப்பட்டது. வேலூர் அருகே உள்ள அலமேலுமங்காபுரம் பகுதியிலும் இந்தநோய் கால்நடைக்கு பரவி உள்ளதால் அங்கும் தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் இந்த நோய் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கால்நடை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நேற்று கால்நடை மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலமும், கிராம சபை கூட்டங்கள் மூலமும் பொதுமக்களுக்கு இந்தநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது நோய்கள் வராமல் எவ்வாறு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வாறு மாடுகளை பராமரிக்க வேண்டும். நோய் பாதித்த மாடுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் விளக்கி கூறினர்.

தடுப்பூசி

சில கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகளுக்கு இந்த நோய் பரவி உள்ளது தெரியவந்துள்ளது.

பரவி வரும் நோயை கட்டுப்படுத்த கால்நடை வளர்ப்போர் தங்களது மாடுகளுக்குபரிசோதனை செய்ய வேண்டும். நோய் அறிகுறி ஏதாவது இருந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.


Next Story