காட்சி கோபுரத்தை அழகுப்படுத்தும் பணி தீவிரம்


காட்சி கோபுரத்தை அழகுப்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுமலைக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். இதைத்தொடர்ந்து மாயாற்றின் கரையோரம் உள்ள காட்சி கோபுரத்தை அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கூடலூர்,

முதுமலைக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். இதைத்தொடர்ந்து மாயாற்றின் கரையோரம் உள்ள காட்சி கோபுரத்தை அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மோடி வருகை

நாடு முழுவதும் புலிகள் பாதுகாப்பு திட்ட 50-வது ஆண்டு விழா வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். தொடர்ந்து ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளியை நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு வந்து சந்தித்து பாராட்டுகிறார்.

பின்னர் வயநாடு வனவிலங்கு சரணாலயத்துக்கு செல்ல உள்ளார். இதையொட்டி முன்னேற்பாடு பணிகளில் அதிகாரிகள், போலீசார் ஈடுபட்டு உள்ளனர். முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சாலை புதுப்பித்தல், நடைபாதைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு சுகாதாரமாக வைக்கப்பட்டு உள்ளது.

அழகுப்படுத்தும் பணி தீவிரம்

இதேபோல் தெப்பக்காடு பகுதியில் மாயாற்றின் கரையோரம் இருக்கைகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அமர்ந்து மாயாற்றை கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட காட்சி கோபுரங்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கிடந்த நிலையில், அதை சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் முதுமலை புலிகள் காப்பக சாலையோரம் பராமரிப்பின்றி துருப்பிடித்து உடைந்து விடும் நிலையில் இருந்த அறிவிப்பு பலகைகளும் அகற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தெப்பக்காடு பகுதியில் அழகுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பராமரிப்பு இன்றி கிடந்த காட்சி கோபுரங்களும் பராமரிக்கப்பட்டு வர்ணம் பூசப்படும் என்றார்.


Next Story