அகஸ்தியர்-லோபமுத்ரா சிலைகள் நிறுவும் பணி தீவிரம்


அகஸ்தியர்-லோபமுத்ரா சிலைகள் நிறுவும் பணி தீவிரம்
x

கல்யாண தீர்த்தத்தில் அகஸ்தியர்-லோபமுத்ரா சிலைகள் நிறுவும் பணி தீவிரம்

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக அருவியான அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வற்றாத இவ்வருவியின் மேல் இருக்கும் கல்யாண‌ தீர்த்தம் என்னும் இடத்தில் அகஸ்தியர் மற்றும் அவரது மனைவி லோபமுத்ராவுடன் ரதத்தில் நின்ற நிலையில் சிலை அமைக்கப்பட்டு இருந்தது.

இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அகஸ்தியரை தரிசனம் செய்து வந்தனர். பவுர்ணமியன்று இக்கோவிலில் இரவு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

மேலும் சுற்றுவட்டார ஊர்களில் உள்ள கோவில்களுக்கு இங்கிருந்து புனித நீர் எடுத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அகஸ்தியர் மற்றும் அவரது மனைவி லோபமுத்ரா சிலைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

தொடர்ந்து புதிதாக அகஸ்தியர் - லோபமுத்ரா சிலையை நிறுவ பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் இங்கு ஆய்வு செய்த அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவும் விரைவில் சிலைகள் நிறுவப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து அமெரிக்காவில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த ஒருவர் தனது சொந்த முயற்சியால் பல லட்சம் ரூபாய் செலவில் கல்யாண தீர்த்தத்தில் அகஸ்தியர் - லோபமுத்ரா சிலையை நிறுவும் முயற்சியை மேற்கொண்டார். இதையொட்டி கோவில் முற்றிலும் சீரமைக்கப்பட்டு புது மண்டபம் கட்டப்பட்டு கலைநயத்துடன் காட்சியளிக்கிறது. விரைவில் சிலையை நிறுவி, கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story