சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்


சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்
x

சென்னையில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து சென்னையில் கடந்த 31-ந்தேதி முதல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

ஆனால் கடந்த ஆண்டில் சென்னையில் வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சென்னை நகர் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அந்த பணிகள் தற்போதைய மழைக்கால முதல் பருவத்தில் கைகொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

வடசென்னை பகுதிகளில்...

ஆனாலும் பட்டாளம், புளியந்தோப்பு, மண்ணடி, வியாசர்பாடி, கலெக்டர் அலுவலகம் அருகில் என வடசென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. ஆனாலும் தேங்கிய மழைநீர் ராட்சத பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளும் மும்முரமாக நடந்தன.

அதேவேளை தாழ்வான குடியிருப்புகளிலும் மழைநீர் சூழ்ந்தது. சிலரது வீடுகளிலும் மழைநீர் எட்டி பார்த்தது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் தவித்தனர்.

பின்னர் மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய ஊழியர்கள் பிரச்சினையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் மாலை மழை இன்னும் வேகம் பிடித்தது. இரவு தாண்டியும் மழை நீடித்ததால் மழைநீர் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் மழைநீர் சேர தொடங்கியது. இதனால் தாழ்வான பகுதிகள் மீண்டும் மழையின் பிடியில் சிக்கின. ஆனாலும் ஊழியர்கள் இரவோடு இரவாக தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கண்ணாமூச்சி காட்டிய மழை

இந்தநிலையில் நேற்றைய பொழுதும் மழையுடன் விடிந்தது. காலையிலேயே சாரல் மழை பெய்தது. அவ்வப்போது வேகம் காட்டுவதும், அவ்வப்போது குறைவதுமாக மழை கண்ணாமூச்சி காட்டியது. ஒரு பக்கம் மழை பெய்து கொண்டிருந்தாலும், இன்னொரு புறம் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு வரை 65 இடங்கள் மழைநீர் தேங்கியுள்ள இடங்களாக கருதப்பட்டு, அங்கே பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால் நேற்று பிற்பகலிலேயே 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது. வியாசர்பாடி கணேசபுரம், ஓட்டேரி, பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் என மீதமுள்ள சில இடங்களில் மட்டுமே மழைநீர் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதேவேளை கடந்த 31-ந்தேதி முதல் நேற்று வரை 19 இடங்களில் மரங்கள் முறிந்துள்ளன. விழுந்த மரங்கள் அகற்றும் பணிகளும் துரிதமாக நடந்தன.

சுரங்கப்பாதைகளில் தடை

அதேவேளை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம், வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதைகள் சேறும் சகதியும் சூழ்ந்திருப்பதால் அப்பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மேற்கண்ட பகுதிகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டனர்.

இதற்கிடையில் நேற்று பகலில் மழை பெய்யவில்லை. இதனால் வடசென்னையின் பல இடங்களில் மழைநீர் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டது. வடபழனி, கோடம்பாக்கம் கங்காநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. மேலும் ஆவடி, திருமுல்லைவாயல் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும் சில இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளும் முழுமூச்சாக நடந்து வருகிறது.

இந்த பணிகளில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 19 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இந்த முறை காப்பாற்றப்பட்டது.

மக்களின் எதிர்பார்ப்பு

பருவமழை என்றாலே சென்னைக்கு 'அலர்ஜி'தான். ஆனால் இந்த முறை அந்த நிலை ஏற்படவில்லை. பாதிப்புகள் குறைவுதான் என்றாலும், உடனடி நடவடிக்கைகள் மக்களுக்கு நிறைவையே அளித்திருக்கின்றன. மாநகராட்சி உள்பட அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்களும் மேற்கொண்டு வரும் உடனடி நடவடிக்கைகள் இந்த முறை மக்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறது என்றே சொல்லலாம். பெரும்பாலான இடங்களில் தண்ணீரும் வடிந்துவிட்டது.

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளும் நிறைவடைந்தால் பெருமளவில் நீர் தேங்க வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகும். சென்னை மக்களும் அதையே எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.


Next Story