மலைரெயில் பாதையை சீரமைக்கும் பணி தீவிரம்
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலைரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலைரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மண் சரிவு
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் மலைரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் பாறைகள், மரங்கள் விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து மலைரெயில் பாதையில் விழுந்த மண்ணை பொக்லைன் எந்திரம் ரெயில்வே ஊழியர்கள் அகற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகிறார்கள். மேலும் தண்டவாளம் மீது விழுந்து கிடக்கும் பாறைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வெறிச்சோடிய நிலையங்கள்
இதற்கிடையில் மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கமாக குளு, குளு காலநிலையிலும் மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். தற்போது ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், ரெயில் நிலையங்கள் வெறிச்சோடின.
குன்னூர்-ஊட்டி இடையே ெரயில் பாதை சீரமைக்கபட்டதை அடுத்து நேற்று முன்தினம் முதல் ரெயில் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனால் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைரெயில் பாதையில் பல இடங்களில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மீண்டும் ரெயில் சேவை தொடங்கும் என்று ெரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.