காயமடைந்த சிறுத்தைக்கு தீவிர சிகிச்சை
சுருக்கு கம்பியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தையின் பின்னங்கால்களில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறுத்தைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கூடலூர்,
சுருக்கு கம்பியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தையின் பின்னங்கால்களில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறுத்தைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிறுத்தை காயம்
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அத்திச்சால் பகுதியில் தனியார் தோட்டத்தில் வைத்திருந்த சுருக்கு கம்பியில் சிக்கி கடந்த 1-ந் தேதி பெண் சிறுத்தை ஒன்று தவித்துக் கொண்டிருந்தது. இதை அறிந்த வனத்துறையினர் நேரில் சென்று சிறுத்தையை மீட்பதற்கான பணிகளை தொடங்கினர். இருப்பினும் சிறுத்தை அச்சத்தில் வனத்துறையினரை நோக்கி ஆக்ரோஷம் அடைந்தது.
இதனால் வனத்துறையினரால் அப்பகுதியில் நெருங்க முடியவில்லை. தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் சிறுத்தை மயக்கம் அடைந்தது. சிறுத்தையை இரும்பு கூண்டில் வனத்துறையினர் அடைத்து முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு கால்நடை மருந்தகத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து சிறுத்தைக்கு இறைச்சி துண்டுகள் வழங்கப்பட்டது. பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்த போது, அதன் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டாக்டர் வரவழைப்பு
இதனால் சிறுத்தையால் சரிவர நடக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து கால்நடை டாக்டர் ஸ்ரீதரன் முதுமலைக்கு வரவழைக்கப்பட்டார். மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் எக்ஸ்ரே கருவிகளும் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சிறுத்தையின் உடல் நலன் குறித்து வனச்சரகர் மனோஜ் கூறியதாவது:-
சுருக்கு கம்பியில் இருந்து காப்பாற்றப்பட்ட சிறுத்தை தற்போது நன்றாக உள்ளது. இருப்பினும் சுருக்கு கம்பியில் சிக்கி இருந்ததால் அதன் பின்னங்கால்களின் செயல்பாடுகள் சற்று குறைவாக உள்ளது. இதனால் சென்னை வண்டலூர் கால்நடை டாக்டர் ஸ்ரீதரன் ஆம்புலன்ஸ் வேனில் வந்தார். அதில் எக்ஸ்-ரே மெஷின் உள்ளிட்ட கருவிகள் இருக்கின்றது. சிறுத்தையின் உடல் பாகங்களை ஆய்வு செய்து, அதனடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும். நன்கு குணமான உடன் வனப்பகுதிக்குள் விடப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் சிறுத்தை புலிக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.