தீவிர தூய்மைப்பணி விழிப்புணர்வு பேரணி


தீவிர தூய்மைப்பணி விழிப்புணர்வு பேரணி
x

கள்ளக்குறிச்சியில் தீவிர தூய்மைப்பணி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து புறப்பட்ட பேரணி சேலம் மெயின்ரோடு, கவரைத்தெரு வழியாக மந்தைவெளிக்கு சென்று முடிவடைந்தது. இதில் நகரமன்ற தலைவர் சுப்பராயலு, நகராட்சி ஆணையர் குமரன், நகரமன்ற துணை தலைவர் ஷமிம்பானு அப்துல்ரசாக், நகரமன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், வணிக சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் அரவை முகவர்கள் மற்றும் தனியார் நெல் அரவை ஆலை உரிமையாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், அரசின் பொது விநியோகத்திட்டத்தின் சங்கிலி மேலாண்மை திட்டத்தின்கீழ் நெல் அரவை செய்து தர விரும்பும் தனியார் அரவை ஆலை உரிமையாளர்கள் நெல் அரவைக்கான மாதிரி விலைபட்டியல் இணைத்து உரிய சான்றிதழ்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டது.

இதில் விழுப்புரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் பாலமுருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், தனியார் அரவை ஆலை உரிமையாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் அரவை முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு பயிற்சி

பள்ளிக்கல்வித்துறையின் மாநில திட்ட இயக்ககத்தின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 73 பேர், ஊட்டியில் நடைபெறும் புதியன விரும்பு கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு 2 பஸ்களில் அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த பஸ்களை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.


Next Story