மதுரை ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை
மதுரை ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
சுதந்திர தினத்தையொட்டி மதுரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதுரை ரெயில் நிலையம் வந்த போது, பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் மூலம் சோதனை செய்யப்பட்டன. அதேபோல, பிளாட்பாரங்களில் உள்ள உடைகள், பொருள்கள் ஆகியவற்றையும் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் கொண்டு சோதனை செய்தனர். இந்த சோதனை கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. ரெயில் நிலையத்துக்குள் வந்து செல்லும் பயணிகள் நவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மதுரையில் இருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று இரவு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. ரெயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவுவாயில் பகுதிகள், ரெயில்நிலைய வளாகம் முழுவதும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.
முன்னதாக இந்த சோதனையானது, மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் அன்பரசு தலைமையில், உதவி கமிஷனர் சுபாஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மோகன் குமார் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர்ராவ் மற்றும் போலீசார் கொண்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப்பெட்டியில் நடத்தப்பட்ட சோதனையை கோட்ட மேலாளர் அனந்த் ஆய்வு செய்தார். பின்னர், தமிழக ரெயில்வே போலீசார் தத்தனேரி வைகை ரெயில்வே பாலத்தில் இருந்து கூடல்நகர் வரை தண்டவாளத்தில் துப்பாக்கி ஏந்திய நிலையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.