திருச்சி மத்திய சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் பேச இன்டர்காம் வசதி


திருச்சி மத்திய சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் பேச இன்டர்காம் வசதி
x

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் பேச இன்டர்காம் வசதி விரைவில் தொடங்கப்படுகிறது.

திருச்சி

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் பேச இன்டர்காம் வசதி விரைவில் தொடங்கப்படுகிறது.

சிறைச்சாலை

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சந்தித்து பேச அனுமதிக்கப்படுகிறது. இதற்காக சிறை அதிகாரிகளிடம் மனு அளித்து அனுமதி பெற்ற பிறகு தான் பேச முடியும்.

கைதிகளும், உறவினர்களும் சிறை வளாகத்தில் கம்பிகளுக்கு இடையே 2 மீட்டர் தூரத்தில் நின்று பேசுவார்கள். ஒரேநேரத்தில் ஏராளமானோர் அங்கு நின்று பேசுவதால் சத்தம் அதிகமாக இருக்கும். இதனால் உறவினர்கள் பேசுவதை கைதிகளால் புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. குறிப்பாக வயதான கைதிகள் அல்லது வயதான உறவினர்கள் வந்து பேசும்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்வதை தெளிவாக புரிந்து கொள்ள சிரமமாக இருந்து வந்தது.

இன்டர்காம் மூலம் பேசும் வசதி

இதற்கு மாற்று ஏற்பாடாக வெளிநாடுகளில் உள்ளதுபோல் கைதிகளிடம் அவர்களுடைய குடும்பத்தினரோ அல்லது உறவினரோ இன்டர்காம் மூலம் பேசும் வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டது. கைதிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கு இடையே நடுவில் கண்ணாடியை அமைத்து இருபுறமும் இன்டர்காம் வசதியுடன் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் விரைவில் தொடக்கம்

முதல்கட்டமாக கோவை, மதுரை ஆகிய சிறைகளில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்சியிலும் இன்டர்காம் வசதியுடன் கைதிகளிடம் உறவினர்கள் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.ஜெயபாரதி, சிறை சூப்பிரண்டு ஆண்டாள் ஆகியோர் நேற்று சிறையில் ஆய்வு செய்தனர்.

திருச்சி சிறையில் நாளொன்றுக்கு 100 முதல் 120 பேர் வரை கைதிகளை சந்தித்து பேசி வருகிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் வசதிகளை செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். திருச்சி சிறையில் விரைவில் இதற்கான வசதி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story