வாகன சவாரி செய்தல், வளர்ப்பு யானைகளை காண ஆர்வம்: முதுமலைக்கு 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை-அதிகாரிகள் தகவல்
முதுமலையில் வாகன சவாரி மற்றும் வளர்ப்பு யானைகளை காண நடப்பாண்டில் 50 ஆயிரம் சுற்றுலா பணிகள் வருகை தந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடலூர்
முதுமலையில் வாகன சவாரி மற்றும் வளர்ப்பு யானைகளை காண நடப்பாண்டில் 50 ஆயிரம் சுற்றுலா பணிகள் வருகை தந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவாரி, வளர்ப்பு யானைகளை காண
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், காட்டெருமைகள் என வனவிலங்குகள் வசித்து வருகிறது. அடர்ந்த வனம் மற்றும் வன விலங்குகளின் புகலிடம் என்பதால் வனத்துறை சார்பில் தினமும் காலை, மாலை நேரத்தில் வனத்துறை வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் சவாரிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதேபோல் முதுமலை தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் காலை 9 மணி மற்றும் மாலை 6 மணிக்கு வளர்ப்பு யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனால் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வளர்ப்பு யானைகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம்
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டி உள்ளது. இதைத் தொடர்ந்து கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டியில் மலர் கண்காட்சியும் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன சவாரி செய்தல், வளர்ப்பு யானைகளை காணுதல் என நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
50 ஆயிரம் பேர் வருகை
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, கோடை வெயிலின் தாக்கம் சமவெளி பகுதியில் அதிகமாக இருந்ததால் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்துள்ளனர். மலர் கண்காட்சி ஊட்டியில் நடைபெறுவதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து இன்னும் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.