ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகத்தில் பெற்ற கடன் தொகையினை செலுத்தினால் வட்டி தள்ளுபடி
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய கடன் நிதியுதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12-ம் ஆண்டு வரை கடனுதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும். இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை செயல்படுத்தப்படும். இந்த அரிய வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.