இடைத்தேர்தல் முடிவுகள் மத்திய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் அமையும்- முத்தரசன்
இடைத்தேர்தல் முடிவுகள் மத்திய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் அமையும் என முத்தரசன் கூறினார்.
இடைத்தேர்தல் முடிவுகள் மத்திய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் அமையும் என முத்தரசன் கூறினார்.
வெற்றி உறுதி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இந்த வெற்றி ஏற்கனவே உறுதியாகி விட்டது.
ஏன் ஒழிக்க வேண்டும்?
மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக, தமிழ் மக்களுக்கு எதிராக, தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
இதற்கெல்லாம் பாடம் புகட்டும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அமையும்.
பா.ஜனதா தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் என அண்ணாமலை கூறுவது சிறந்த நகைச்சுவை ஆகும். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை ஒழிக்கப்படும் என அண்ணாமலை கூறி உள்ளார். இந்து சமய அறநிலையத்துறையை ஏன் ஒழிக்க வேண்டும்?
இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு இருக்கின்றன. இதுதான் பா.ஜனதாவுக்கு வெறுப்பாக உள்ளது.
அதிக வாக்குகள்
அ.தி.மு.க.வில் ஒரு இலையை இ.பி.எஸ்சும், மற்றொரு இலையை ஓ.பி்.எஸ்சும் எடுத்துக்கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் தனித்தனியாக போட்டியிட்டாலும், ஒன்று சேர்ந்து போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது. இவர்கள் இருவருக்கும் இடையே பகையை ஏற்படுத்தி பா.ஜனதா அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறது.
அ.தி.மு.க. அலுவலகத்தை நோக்கி பா.ஜனதாவினர் நடையாய் நடந்த காலம் மாறி, தற்போது பா.ஜனதா அலுவலகத்துக்கு அ.தி.மு.க.வுக்கு இரு பிரிவினரும் நடையாய் நடக்கின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலை காட்டிலும் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிகமான வாக்குகளை பெறும்.
பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி உடன் இருந்தார்.